புதன், 30 ஜூன், 2021

ஆல்கஹால், அதிக காபி, நோய் எதிர்ப்பு சக்தியின் எதிரியா..?


சிப்ஸ், பேக்கரி உணவுகள், உறைந்த உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.

கொரோனா காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோம். உடல் ஆரோக்கியத்திற்கு எதை எடுத்துக்கொள்வது என்பதில் கவனம் செலுத்தும் நேரத்தில் என்ன சாப்பிடக்கூடாது என்பதை மறந்து விடுகிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை இழக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய 5 பொதுவான உணவுகள் பற்றி காண்போம்.

சர்க்கரை:

அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு நல்லது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு, நெக்ரோஸிஸ் ஆல்பா கட்டி , சி-ரியாக்டிவ் புரோட்டீன் மற்றும் இன்டர்லூகின்-6 போன்ற அழற்சி புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.

உப்பு :

அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடும். சிப்ஸ், பேக்கரி உணவுகள், உறைந்த உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். பாக்டீரியா தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கும். உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி பெரியவர்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய அதிகபட்சம் ஐந்து கிராம் உப்புதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தோராயமாக ஒரு டீஸ்பூன் அளவாகும். அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் குளுக்கோகார்டிகாய்டு (glucocorticoid ) அளவு அதிகரிக்கும்.

எண்ணெயில் பொறித்த உணவுகள் :

வறுத்த உணவுகள் நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆய்வின்படி, வறுத்த உணவை சாப்பிடுவது கடுமையான இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் உண்டாகும்.பிரஞ்சு ஃபிரை, சமோசாக்கள், பேக் செய்யப்பட்ட சிப்ஸ் அல்லது டீப் ஃபிரை செய்யப்பட்ட எதையும் சாப்பிடுவது ஆபத்து. எனவே அவற்றை தவிர்த்தல் நல்லது.

ஆல்கஹால் :

ஆல்கஹால் அதிகமாக உட்கொள்ளும்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். குறிப்பிட்ட அளவை (பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு பானம், ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்கள்) தாண்டி எடுத்தால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். மேலும் நிமோனியா மற்றும் பிற சுவாச பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கு ஒருவர் எளிதில் பாதிக்கப்படுவார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கஃபைன் :

அதிக காபி / தேநீர் உட்கொள்வது உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யும். இதனால் அழற்சி செயல்பாடுகள் தடைபடலாம். இதனால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். எனவே கஃபைன் உணவுகளை தவிருங்கள். காஃபி, டீயையும் தவிர்ப்பது நல்லது.

திங்கள், 28 ஜூன், 2021

உடல் எடை : ஒரு மருத்துவ அரசியல்


புனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது.

சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

நம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக உயர்கொழுப்பு உணவை ஒரு மருத்துவர் பரிந்துரைத்தால் என்ன ஆகும்? தடுக்கி விழுந்தால் வழக்கு போடும் மனப்பான்மையுள்ள அமெரிக்க மக்கள்,

நாளை வேறொரு காரணத்தால் மாரடைப்பு வந்தாலும், மருத்துவர் மேல் வழக்கு போடுவார்கள், இல்லையா? அறிவியல் பின்புலன் இல்லாத நீதிபதிகள், நீங்கள் ஏன் அமெரிக்க இதய அமைப்பு பரிந்துரைத்த டயட்டை கொடுக்கவில்லை?’ எனக் கேட்டு கோடிக்கணக்கான டாலர் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி தீர்ப்பளிப்பார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களின் லாபியும் மருத்துவர்களை அணுகுவதை விட இதுபோன்ற அதிகாரபீடங்களை அணுகினாலே போதும் என்பதை எளிதில் உணர்ந்து விட்டன. இதற்குச் சில உதாரணங்களை காண்போம்.

அமெரிக்க அரசின் புள்ளி விவரத்தின்படி, 60% அமெரிக்கர்கள் அதிக எடையுடன் இருக்கிறார்கள். 25% அமெரிக்கர்கள் உடல் பருமனாக (Obesity) உள்ளார்கள். எனவே, இயல்பான எடையுடன் இருக்கும் அமெரிக்க மக்களின் சதவிகிதம் வெறும் 15% மட்டுமே!மீதமுள்ள 85% பேரும் என்ன செய்வார்கள்? 

எடையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களில் சேர்வார்கள், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள், எடையைக் குறைக்கும் உணவுகளை  நாடுவார்கள்.

நல்ல உடல்நிலையில் இருக்கும் பலரையும் கூடுதல் எடை, உடல் பருமன் என சொல்லியதால் ஏற்பட்ட விளைவு இது. இதன் அரசியல் மிகவும் மோசமானது.
உடல் பருமன், அதிக எடை என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ. (Body Mass Index, BMI) எனும் முறை 1830-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி பி.எம்.ஐ. 25-க்கும் அதிகமாக இருந்தால் ஒருவர் அதிக எடை, 30 என்றால் உடல் பருமன் என்று கூறப்பட்டது. ஆனால் பி.எம்.ஐ. அளவீடே அடிப்படையில் அறிவியல் ஆதாரம் அற்றது. இந்த முறை ஜோசியத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆம், பி.எம்.ஐ. கணக்கீட்டு முறையை உருவாக்கிய க்விட்லட் (Adolphe Quetelet) என்பவர் ஒரு ஜோதிடர். கிரகங்களை வைத்து மனித எடையைக் கணிக்க முடியுமா என்று அறியவே பி.எம்.ஐ. கணக்கீட்டை உருவாக்கினார்.

BMI அளவை எப்படிக் கணக்கிடுவது?

பி.எம்.ஐ. = உடல் எடை / உயரம் (மீ.) * உயரம் (மீ.)
உங்கள் எடை 72 கிலோ. உயரம் 1.72 மீ. (172 செ.மீ)
எனில், உங்கள் பி.எம்.ஐ. = 24

பி.எம்.ஐ. அளவால் எவ்வித மருத்துவரீதியான பலனும் கிடையாது. பி.எம்.ஐ. சொல்கிறபடி சரியான எடையுடன் உள்ளவர் அதிக பி.எம்.ஐ. உள்ளவரை விடவும் அதிகநாள் உயிர்வாழ்வார் என்று எந்த ஓர் அறிவியல் ஆய்வும் கூறவில்லை.

அறிவியல் கூறுவது என்னவென்றால், மிக ஒல்லியாக இருப்பவர்களும், மிக குண்டாக இருப்பவர்களும் அதிக அளவில் மரணமடைகிறார்கள் என்பதே. இதன்படி பி.எம்.ஐ. 35 என்கிற அளவை விட அதிகமாக உள்ளவர்களே அதிக அளவில் மரணம் அடைகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10% மட்டுமே.

அறிவியல் இப்படி இருக்கிறது. ஆனால் மருத்துவப் பரிந்துரைகளோ வேறு மாதிரி உள்ளது. பி.எம்.ஐ. 25-ஐ தாண்டினால் ஆபத்து, 30 என்றால் பேராபத்து என ஊடகங்களும், அரசு அமைப்புகளும் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன.

பி.எம்.ஐ.-க்கும் மரணத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த ஆய்வுகள், எவ்வித தெளிவான முடிவையும் அளிக்கவில்லை. 2004-ல் ஜாமா (JAMA) எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஆய்வு, உடல் பருமனும், உடற்பயிற்சியின்மையும் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களை ஏற்படுத்துவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை வெளியுலகில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டபோது நிலைமை தலைகீழாக இருந்தது.

உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் அமெரிக்க மக்கள் மரணமடைகிறார்கள் (2010- 2011 வருடப் புள்ளிவிவரம்). இதில் 75% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த 75% பேரில் அதிக எடை மற்றும் உடல் பருமன் (பி.எம்.ஐ. 25-க்கு மேல்) என்று கூறப்படுபவர்கள் இயல்பான எடை என்று சொல்லக்கூடிய பி.எம்.ஐ. அளவு 25-க்குக் கீழ் இருப்பவர்களை விட அதிக ஆண்டு உயிர் வாழ்ந்துள்ளார்கள்.

இவர்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சுமார் 6 லட்சம் மரணங்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவில் நிகழ்கின்றன. இந்த 6 லட்சம் மரணங்களில் அதிக அளவிலான மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை – விபத்து மற்றும் புற்றுநோய். மூன்றாம், நான்காம் இடங்களில் தான் மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை வருகின்றன.

ஆக, இந்த 6 லட்சம் மரணங்களில் 4 லட்சம் மரணங்களுக்கு காரணம் உடல் பருமன் எனக் கூறுவது எப்படி என விவரமறிந்த விஞ்ஞானிகள் கேள்விகளை எழுப்பினாலும் ஊடகங்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. உடல் பருமனைக் கட்டுப்படுத்தினால் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களைத் தடுக்கலாம் எனப் பிரசாரம் செய்யப்பட்டது.

இது அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல 1990-களில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 1985-ல் அமெரிக்கச் சுகாதார மையம், பி.எம்.ஐ. அளவு 27.8 இருந்தால் ஒருவர் அதிக எடை கொண்டவர் எனக் கருதலாம் என நிர்ணயித்தது. இதன்படி ஐந்தடி ஏழு அங்குலம் (168 செ.மீ.) உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ எடை இருந்தால் அவர் இயல்பான எடை என்னும் வகையைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார்.

ஆனால் 1990-களில் திடீரென இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால்தான் இயல்பான எடை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி அமெரிக்கர்கள் அதிக எடை கொண்டவர்கள் ஆனார்கள். அதாவது, இரவில் 77 கிலோ எடையுடன், பி.எம். ஐ அட்டவணைப்படி இயல்பான எடையுடன் உறங்கச் சென்றவர்,

அடுத்தநாள் காலையில் அதே 77 கிலோ எடையில் பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை கொண்டவராக மாறினார்! (பழைய பி.எம்.ஐ. முறைப்படி 168 செ.மீ. உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ வரை எடை இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் புதிய முறைப்படி அவரது எடை 69 கிலோவுக்குள் இருக்கவேண்டும்.)

இதனால் உண்டான விளைவுகள்? பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை என்று முத்திரை குத்தப்பட்டவர்களை மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்யவும், உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கவும் பரிந்துரை செய்தார்கள். நோயாளிக்கு கொலஸ்டிரால் இருந்தால், கொலஸ்டிரால் மருந்தான ஸ்டாடின் பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அமெரிக்கர்களின் இன்சூரன்ஸ் கட்டணங்கள் உயர்ந்தன.

எதனால் இந்த பி.எம்.ஐ. அளவு குறைக்கப்பட்டது? இதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்கள் – அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே. இவர்கள் அனைவரும் தங்களுடைய தேர்தல் நிதிக்கு மருந்து நிறுவனங்களையும் பிற உணவு நிறுவனங்களையுமே மிகவும் நம்பியிருக்கிறார்கள். மேலும் பி.எம்.ஐ. பரிந்துரைகளைச் செய்யும் மருத்துவ அமைப்புகள் பலவும் அந்த நிறுவனங்களிடம் நன்கொடை பெறுபவை.

இவற்றில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பலரும் அந்த நிறுவனங்களிடம் நிதி பெற்று ஆராய்ச்சி செய்பவர்கள். அரசியல்வாதிகள் ‘விஞ்ஞானிகளே சொல்லிவிட்டார்கள்’ எனச் சொல்லி இதுபோன்ற முடிவுகளைச் சட்டமாக்கி விடுவார்கள். இது மருத்துவப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறும். மருத்துவக் கல்லூரியில் ‘பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால் தான் இயல்பான எடை’ என்கிற பாடமே கற்றுத் தரப்படும்.

உடல் பருமனை மரணத்துக்குக் காரணமாக காட்டி மிகைப்படுத்துவதால் மக்கள் உடல்நலனை விட்டுவிட்டு வெயிட் வாட்சர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணம் கட்டி உடலை இளைக்க வைக்க மெனக்கெடுகிறார்கள். இந்தியாவிலும் இதுபோன்று உடலை இளைக்க வைக்க எத்தனை பேர் பணத்தையும் நேரத்தையும் இஷ்டத்துக்குச் செலவு செய்கிறார்கள்?

ஒரு போலியான பயத்தை உண்டு பண்ணி எதற்காக அதைவைத்து நம் பணத்தையும் நேரத்தையும் பறிக்கவேண்டும்?இதனால் சீரியல், ஓட்மீல் மாதிரியான உணவுகள் அதிகம் விற்பனையாகின்றன. எந்த வியாதியும் இல்லாமல், ஆனால் உடல் பருமனுடன் இருக்கும் சிலர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பருமனைக் குறைக்க அறுவைசிகிச்சையும் செய்து கொள்கிறார்கள்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடல் பருமனாக இருப்பவர்களிடம் அதிகச் சந்தா தொகையை வசூலிக்கின்றன. மெக்டானல்ட்ஸ், கோகோ கோலா போன்ற நிறுவனங்களும் இதைப் பயன்படுத்தி ‘மாட்டிறைச்சி பர்கருக்குப் பதில் சிக்கன் பர்கரைச் சாப்பிடுங்கள், வழக்கமான கோக் வேண்டாம், கலோரி இல்லாத கோக்கைக் குடியுங்கள்’ என்று விளம்பரம் செய்து ஆரோக்கிய உணவு என்கிற பெயரில் குப்பை உணவுகளை விற்கின்றன.

உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் பல்லாயிரம் கோடி டாலர்களைச் சந்தையில் ஈட்டுகின்றன. அமெரிக்காவில் இடி இடித்தால் இந்தியாவில் மழை வரும் எனும் கதையாக அங்கே நடக்கும் இந்தக் கூத்துக்கள் அனைத்தும் இந்தியாவிலும் நடக்கின்றன. உலகெங்கும் இந்த உடல் பருமன் வணிகம் களைகட்டுகிறது.

ஒருபக்கம் உடல் பருமனை உருவாக்கும் குப்பை உணவுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கூவிக்கூவி விற்கின்றன. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு பன்னாட்டு உணவுகளுக்கு மாறுகிறார்கள். மறுபக்கம் இந்த உணவுகளால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க அதே பன்னாட்டு நிறுவனங்கள் ‘டயட் கோக் (Diet Coke), சப்வே சாண்ட்விச் (Subway Sandwich)’ போன்ற அதே குப்பை உணவுகளின் மறுவடிவங்களையும் விற்பனை செய்கின்றன.

ஒரு நிறுவனத்தின் உணவுகளைக் கெடுதல் என்று அறிகிற மக்கள், அதேபோன்ற குப்பை உணவுகளை விற்கும் இன்னொரு நிறுவனத்தை நம்பி ஆரோக்கியம் என்கிற பெயரில் பணத்தை வீண் செய்கிறார்கள். இப்படிக் குப்பை உணவுகளால் வியாதிகள் வந்தபின் அவற்றைக் குணப்படுத்த மருந்துகளை நாடுகிறார்கள்.

இப்படிக் கற்பனையாக கண்டுபிடிக்கபட்ட வியாதிகளில் ஒன்று உயர் கொலஸ்டிரால் என்பது. கொலஸ்டிரால் அளவு 200-ஐ தாண்டினால் ஆபத்து, மாரடைப்பு வரும் எனப் பீதியூட்டப்படுவதால் பலரும் அச்சமடைந்து கொலஸ்டிரால் கட்டுப்பாட்டு மருந்துகளை (ஸ்டாடின்) எடுத்துக்கொள்கிறார்கள்.

ஸ்டாடின்கள், பல மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். இவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்குமே ஒழிய மரணத்தைத் தடுக்காது. மேலும் இவற்றின் பின்விளைவுகள் ஏராளம். இந்திய ஜனத்தொகையில் சுமார் 8% பேர் ஸ்டாடின்களை உட்கொண்டுவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று ‘8% இந்தியர்கள் மட்டுமே ஸ்டாடினை உட்கொள்கிறார்கள்.

ஸ்டாடின் விற்பனை சுமார் 200 கோடி டாலர் (சுமார் 12,000 கோடி ரூபாய்). மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய கறை, ஸ்டாடின்களே. கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களை நோயாளிகளாக்கி, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஸ்டாடின் மூலம் ஏற்படுத்தியது பன்னாட்டு மருந்து நிறுவனங்களே.

ஸ்டாடின்களால் நன்மையடைபவர்கள் யார் என்றால், ஏற்கெனவே மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்கள்தான். வேறு யாருக்கும் ஸ்டாடினால் நன்மை கிடையாது. ஆனால், மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்களுக்குக்கூட ஸ்டாடின் அளிக்கும் நன்மை என்பது தினம் ஆஸ்பிரின் சாப்பிடுவதை விட குறைவான அளவு நன்மைதான்!

மருந்து நிறுவனங்கள் உருவாக்கிய அடுத்தக் கற்பனை வியாதி – மன அழுத்தம். உலகில் மன அழுத்தம் அனைவருக்கும் வருவதுண்டு. ஆனால், இதையே ஒரு வணிகமாக்கி கோடிகளில் சம்பாதிக்கின்றன நிறுவனங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளின் விற்பனை, உலக மருந்து விற்பனையில் முதல் பத்து இடங்களில் உள்ளது. ஏதோ தாங்க இயலாத சோகத்தைப் போக்க இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று மட்டும் எண்ணவேண்டாம்.

சோகத்துக்கு மட்டுமல்ல, மாதவிலக்கு சமயங்களில் உண்டாகும் எரிச்சல், விவாகரத்து, பணிச்சுமையால் உண்டாகும் மன அழுத்தம் போன்றவற்றுக்கும் இந்த மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.
சோகமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் முன்பு நண்பர்கள், குடும்பம், தியானம், கோயில் என்று பலவழிகளில் அதைச் சரிசெய்யமுடியும். ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் மருந்தே தீர்வாக எடுத்துச் சொல்லப்படுகிறது. இதற்கு ஏராளமான பின்விளைவுகள் உண்டு.

உடல் பருமன், மன அழுத்தம் போன்றவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் இன்னொரு பிரச்னை, பாலியல் சார்ந்த பிரச்னைகள். ஆண்குறி எழுச்சியின்மை (erectile dysfunction) வியாதியும் மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். வயகராவின் கதையையும் அதன் விற்பனை குறித்தும் நாம் அறிவோம். இந்த வியாதியாவது 40, 50 வயதில் ஆண்களுக்கு வரக்கூடிய ஒரு பிரச்னை. ஆனால் மானுட வரலாற்றில் இல்லாத புதுமையாக, பெண் பாலியல் ஆர்வமின்மை (female sexual dysfunction) எனும் வியாதியைக் கண்டுபிடித்துள்ளன மருந்து நிறுவனங்கள்.
பெண்களுக்குப் பொதுவாக கர்ப்பம், வயது முதிர்தல், மன அழுத்தம், பணிச்சுமை, ஹார்மோன் சமநிலை தவறுதல் போன்ற காரணங்களால் பாலியலில் ஈடுபாடு இல்லாமல் போக வாய்ப்புண்டு.

இதைப் பயன்படுத்தி சந்தையில் இதற்கும் மாத்திரைகள் வந்துவிட்டன. மூன்றில் ஒரு பெண் இவ்வியாதியால் பாதிக்கப்படுவதாக மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் ஆண்டு முழுக்க உறவு கொள்ளாமல் சில மாதங்களே உறவில் ஈடுபடும். மனிதனால் ஆண்டு முழுவதும் உறவுகொள்ள முடியும் என்றாலும் இயற்கையாகச் சிலசமயம் அவனது பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டும், சில சமயம் குறைந்தும் காணப்படும். 45 வயதுக்கு பிறகு ஆண்களின் டெஸ்டெஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஆண்குறி எழுச்சியின்மை, பாலியல் ஈடுபாடு குறைதல் போன்றவை ஏற்படுவது வழக்கம்.

ஆனால் எந்த வயதிலும், எந்தச் சமயத்திலும் விருப்பம் உண்டாகும்போது உறவுகொள்ள முடியாவிட்டால் அது நிச்சயம் வியாதிதான் என்கிற கண்ணோட்டம் இந்த நிறுவனங்களால் பரப்பப்பட்டுவிட்டது. மக்களும் அதற்காக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டின் பத்திரிகைகளில்தான் இதுதொடர்பாக எத்தனை விளம்பரங்கள்!
உணவு, மருத்துவம், ஆரோக்கியம், உடற்பயிற்சி என அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட காலகட்டம் இது.


ஞாயிறு, 27 ஜூன், 2021

மாட்டுக்கறி சாப்பிட்டால் உடம்புக்குக் கெடுதலா?


இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டாலும் கூட மாட்டுக் கறி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
மாட்டுக் கறியை சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இந்த நிலையில், மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்றும், கோழிக் கறியை அதிகமாக உண்டால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்க குடிக்கும் காபியில் நெய் சேர்ப்பது ஏன் நல்லது தெரியுமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

அதிக அளவு மாட்டுக்கறியை உண்பதால் இதய நோய் வருமாம். ஏனெனில் அந்த இறைச்சியில் அதிகமான அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதனால் தமனிகளில் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதோடு, வீரியம் குறைந்த நாள்பட்ட நோயையும் ஏற்படுத்தும்.

ஆனால் அதேசமயம், மாட்டுக் கறியே சாப்பிடக் கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை. மற்ற இறைச்சிகளைப் போல இதையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அரிசி, வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் கூட கொழுப்புகள் உள்ளன. இருப்பினும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகிறோமோ, அது போலவே அந்த மாட்டுக்கறியையும் அளவோடு உண்ண வேண்டும்.

மாட்டுக்கறியைச் சாப்பிடுவதால் தமனிகளில் தடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டாம். ஏனெனில் மிருகத்தின் கொழுப்பானது தமனிகளில் தங்கி, இரத்த ஒட்டத்தை தடுக்கும். அதனால் மாரடைப்புகள் கூட ஏற்படும் என்கிறார்கள்.

 மாட்டுக்கறியை அதிக அளவில் உண்போருக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாம். இருப்பினும் இதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை. மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென், புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள்.

ஆகவே அளவுக்கு அதிகமாக மாட்டுக்கறியை உண்டால் உடலில் கார்சினோஜென்னின் அளவு அதிகரிக்கும். இதனால் புற்று நோய் வரலாம் என்று கணிக்கப்படுகிறது.

மாட்டுக்கறியில் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை அதிகமாக உண்டால் உடலானது அதிக எடை அடையும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எந்த சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் போதிய உடல் இயக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாதாரணச் சாப்பாடு சாப்பிட்டாலும் கூட எடை கூடத்தான் செய்யும்.

எதுவாக இருந்தால் என்ன, அளவோடு உண்டால் வளமோடும், நலமோடும் வாழலாம். அது மாடாக இருந்தாலும் சரி கோழியாக இருந்தாலும் சரி.


 

சனி, 26 ஜூன், 2021

நாட்டுக் கோழியின் மருத்துவப் பயன்கள் என்ன..?


கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்களைக் கொறித்துத் தின்றுவிட்டு, உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன நாட்டுக் கோழிகள். ஆனால், பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டுவிட்டு, எங்கும் நகர வழியின்றி, பல்வேறு நோய்களைத் தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறது பிராய்லர் கோழி.

மரபைத் தொலைத்த பிராய்லர் கோழி

ஹார்மோன் மருந்துகளால் எலும்பு சார்ந்த நோய்கள், வாழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளால் கண் நோய்கள், அதிக உணவால் உடல் பருமன் என நோய்களின் கூடாரமாக உள்ளன பிராய்லர் கோழிகள்.
நோய்கள்

பதினொரு வயதுச் சிறுமி, இப்போது வளர்ந்த பெண்ணைப்போலத் தோற்றம் தருவதற்குப் பிராய்லர் கோழியும் ஒரு காரணம்தான். குறைந்த வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கு வெள்ளைக் கோழியில் உள்ள ஹார்மோன் கலப்படங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

பிராய்லர் கோழிகள் விரைவாக வளர்வதற்காகக் கொடுக்கப்படும் வேதிப்பொருட்கள், மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை உண்டாக்கக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடலின் இயக்கங்களைப் புரட்டிப்போடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவருகின்றன பிராய்லர் கோழி ரகங்கள்.

அளவை மிஞ்சும் ஆன்டிபயாடிக்

எல்லாச் சூழ்நிலைகளிலும், நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும், உடல் எடையை அதிகரிக்கவும் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் `ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் விளைவால், ரெசிஸ்டண்ட் பாக்டீரியாக்கள் (அந்த மருந்துகளை எளிதில் சமாளிக்கும் பாக்டீரியாக்கள்) அதிகரித்து, கோழிகளிடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகுகிறது. இந்த நோய்களின் தாக்கம், அதைச் சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல நீள்கிறது.

மருந்தாகும் நாட்டுக் கோழி

உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம்.

நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.
தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து.

நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற, கடைகளில் கிடைக்கும் உடனடி மசாலாப் பொடிகளைத் தவிர்த்து, அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.

வெப்பம் அதிகரிப்பு

கோழிக்கறி சாப்பிட்டால், சித்த ஆயுர்வேத முறைகள் குறிப்பிடும் வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது. உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் குணம் கோழிக்கறிக்கு உண்டு. பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கோழி இறைச்சியைச் சாப்பிட வேண்டும்.

மரபின் சின்னம் கோழிகள்

கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டி” - எனச் சேவல் சண்டைகளின் நயத்தை விளக்குகிறார் கம்பர். சோழ நாட்டின் தலைநகரமே கோழியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. வீரம் மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக விளங்கிய கோழியினங்கள், இப்போது உடல் குறையோடு முழுக்க முழுக்க வியாபாரத்துக்காக வளர்க்கப்படுகின்றன.

கோழி உணவுப் பிரியர்கள் பிராய்லர் கோழிகளைத் தவிர்த்து, காலம் மற்றும் உடல்நிலை சார்ந்து நாட்டுக் கோழி இனங்களை உட்கொள்வது நல்வாழ்வுக்குப் பெரிதும் உதவும்.

அழகே அழகு


அழகே அழகே தனி அழகே